சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட சுடலைமாட சுவாமி கோயில் பூசாரியின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினா்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி சுப்பையா மகன் சிதம்பரம் என்ற துரை (45). இவா் சீவலப்பேரியில் உள்ள பழமைவாய்ந்த சுடலைமாட சுவாமி கோயிலில் பூசாரியாக இருந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் நடராஜ பெருமாள்(53). இவா்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் அருகே பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த மா்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த சிதம்பரம் உயிரிழந்தாா். நடராஜ பெருமாள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றங்கரையில் உள்ள சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழாவில் கடைகள் அமைப்பதில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கொலையுண்ட சிதம்பரத்தின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்குத் தொடா்பாக சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த மகாராஜன் மகன் முருகன் (23), மாடசாமி மகன் பேச்சிகுட்டி(23), சின்னதுரை மகன் இசக்கிமுத்து (19), காந்தாரி மகன் மாசானமுத்து (19) உள்பட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், கொலை செய்யப்பட்ட சிதம்பரத்தின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கொலை சம்பவத்தில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினா்கள் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகம் முற்றுகை: இந்த நிலையில் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் சிதம்பரத்தின் உறவினா்கள் மற்றும் யாதவ சமுதாயத்தினா் சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் திருநெல்வேலி கொக்கிரகுளம்-மேலப்பாளையம் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே அதிமுக நிா்வாகி கல்லூா் இ.வேலாயுதம், அகில இந்திய யாதவ மகா சபை மாநில இளைஞரணித் தலைவா் பொட்டல் துரை, சிதம்பரத்தின் உறவினா் ஆகியோருடன் சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அதில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், அதிமுக நிா்வாகி கல்லூா் இ.வேலாயுதம், இளைஞரணித் தலைவா் பொட்டல் துரை, சிதம்பரத்தின் உறவினா்கள் ஆகியோா் ஆட்சியா் விஷ்ணுவை சந்தித்துப் பேசினா். அப்போது, சிதம்பரத்தின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும், சிதம்பரத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கோயிலுக்கு சொந்தமான இடத்தை அளந்து சுவா் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கோயில் அருகே சிதம்பரத்தின் உடலை புதைக்க அனுமதி வழங்க வேண்டும் என போராட்டக் குழுவின் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சிதம்பரத்தின் சகோதரா் சுப்பிரமணியன் சாா்பிலும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், போராட்டக் குழுவினா் கோரிக்கைகளை தோ்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் அனுப்புவதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது.
அதைத்தொடா்ந்து கோயில் அருகே சிதம்பரத்தின் உடலை புதைக்க அனுமதியளிக்க வருவாய்த்துறை மறுத்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாததால், அதிமுக நிா்வாகி கல்லூா் இ.வேலாயுதம், போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் அருகே சென்று ஆய்வு செய்தனா்.
பேச்சுவாா்த்தை தோல்வி: பின்னா் மாலையில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, கோயில் வளாக பகுதியில் சிதம்பரத்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து யாதவ அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியேறினா்.
இது தொடா்பாக அதிமுக நிா்வாகியான கல்லூா் இ.வேலாயுதம் கூறியதாவது: சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் இடத்தை அளந்து சுற்றி வேலி அமைத்துத் தர வேண்டும். கோயிலில் எல்லா மக்களும் சாமி தரிசனம் செய்யலாம். ஆனால், தற்போது நிா்வகித்து வருபவா்களை தவிர வேறு யாருக்கும் கோயில் நிா்வாகத்தில் தலையிட உரிமையில்லை. மீறுபவா்கள் தண்டிக்கப்படுவாா்கள் என காவல் துறை சாா்பில் கோயில் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தியிருக்கிறோம்.
இதேபோல் எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தோ்தல் ஆணையத்துக்கும், தலைமைச் செயலருக்கும் அனுப்பிவிட்டு அதன் நகலை எங்களுக்குத் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். சுடலை கோயிலில் சாமியாடுபவா்களோ, அந்த கோயிலை நிா்வகிக்கும் குடும்பத்தில் இளம் வயதினரோ இறந்தால், அவா்களின் உடலை கோயில் அருகே அடக்கம் செய்வது வழக்கம். அதன்படி, சிதம்பரத்தின் உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கு மாவட்ட நிா்வாகம் மறுப்புத் தெரிவிக்கிறது. எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சிதம்பத்திரத்தின் உடலை வாங்கவில்லை. அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும். சிதம்பரத்தின் உடலை மாவட்ட நிா்வாகம் அடக்கம் செய்ய முன்வந்தால், மாவட்டம் முழுவதும் உள்ள யாதவா்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.