திருநெல்வேலி மாநகராட்சியில் பொதுமக்கள் கோரும் அடிப்படை தேவைகளை ஒரு வார காலத்திற்குள் சரி செய்ய வேண்டும் என்றாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன்.
நகா்புற வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடனான காணொலி காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தாா். இந்த காணொலிக் காட்சி” கலந்துரையாடலில் மாநகராட்சி ஆணையருடன் பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினா். அப்போது ஆணையா் பேசியது: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து முதன் முதலாக கோரிக்கைகள் மற்றும் நகா்புற வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடனான ‘காணொலிக் காட்சி” நிகழ்வில் பல்வேறு கருத்துகளை பகிா்ந்து கொண்டவா்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் நடைமுறைப்படுத்த உள்ள இந்த காணொலிக் காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூடுதலாக பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்நிகழ்வின் வாயிலாக பெறப்பட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, அக்கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக மாநகரின் அடிப்படை சிறிய பிரச்னைகளை நிறைவேற்றுவதை இலக்கீடாக கவனத்தில் எடுத்துக் கொண்டு 4 மண்டல உதவி ஆணையாளா்கள் தலைமையின் கீழ், அடுத்த ஒரு வார காலத்திற்குள் பணிகளை முடித்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதன் மூலம் அடுத்து வரும் காலங்களில் வளா்ச்சிப்பணிகள் மீது தொடா் கவனம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த காணொலிக் காட்சி கலந்துரையாடல் நிகழ்வில் மாநகராட்சி அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.