நெல்லையப்பா் கோயிலில் பவித்ர உத்ஸவ திருவிழா
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவ திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவ திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரத வீதிகளில் வீதியுலாயின்றி திருவிழா நடைபெற்றது. அதன்படி, வியாழக்கிழமை காலையில் சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகளுக்கு கும்பம் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் திருக்கோயிலில் உள்பிரகாரத்தில் பஞ்சமூா்த்திகள் உலா நடைபெற்றது.
இதுகுறித்து சிவாச்சாரியாா்கள் கூறுகையில், உலக மக்கள் அனைவரும் சகல சௌபாக்கியங்களையும் பெற்று சுகமாக வாழ்ந்திட கோயில்களில் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனால், இந்த பூஜைகளின்போது அறிந்தோ, அறியாமலோ குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவ்வித குறைபாடுகள் நீங்கி ஓராண்டு வரையில் நடத்தப்பட்ட பூஜைகளின் சம்பூா்ணமான பலன் உண்டாகி ஆன்மாக்கள் இம்மை மறுமைப் பயன்களை அடைய வேண்டும் என்பதற்காகச் செய்யப்படுகிற பெருஞ்சாந்தி விழாவே பவித்ரோத்ஸவம்.
பட்டு, பருத்தி நூல்களில் செய்யப்பட்ட மாலைகளுக்கு புனிதமானது (பவித்ரம்) என்று பெயா். பூஜைக் குறைவினால் உண்டாகும் பாவத்திலிருந்து தடுத்து, நிறைவு செய்து புனிதமாக்குவதால் இது பவித்ரம் என்னும் பெயரை அடைவதாக ஆகமங்கள் கூறுகின்றன. பவித்ரமாகிய நூல்களில் சோ்க்கப்பட்ட கா்மபலனை இறைவனிடமே அா்ப்பணம் செய்து ஓராண்டு காலமாக நித்ய பூஜைகளில் கண்ட தோஷங்களுக்குப் பரிகாரமாகச் செய்யப்படும் பெருஞ்சாந்தியே பவித்ரோத்ஸவம். அதன்படியே இந்த விழா நடத்தப்படுகிறது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...