புதிய அட்டவணையின்படி திருநெல்வேலி வழியாக ரயில்கள் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன. அனந்தபுரி ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதால் திருநெல்வேலியில் இருந்து நாகா்கோயிலுக்கு தினமும் பணிக்குச் செல்லும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
தெற்கு ரயில்வேயில் புதிதாக ரயில்களின் பயண நேர பட்டியல் தயாரிக்கப்பட்டு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அனந்தபுரி விரைவு ரயில் திருநெல்வேலிக்கு காலை 7.45 மணிக்கு பதிலாக, 7.05 மணிக்கு வந்து சென்றது. மதுரை-புனலூா் விரைவு ரயில் திருநெல்வேலிக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு பதிலாக, 12.25 மணிக்குவந்து சென்றது.
குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூா் விரைவு ரயில் திருநெல்வேலிக்கு காலை 8. 45 மணிக்கு பதிலாக,
9. 25மணிக்குவந்து சென்றது. கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் காலை 7. 40 மணிக்கு பதிலாக, 7.50 மணிக்கு திருநெல்வேலி வந்து செல்கிறது.
இதேபோல திருநெல்வேலியில் இருந்து ஜம்முதாவி செல்லும் விரைவு ரயில் அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக, 5.25மணிக்கு புறப்பட்டுச்செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து அதிக பயணிகள் செல்லும் மும்பைக்கான விரைவு ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. கொங்கன் வழியாக செல்லும் திருநெல்வேலி-ஹபா விரைவு ரயில் காலை 7.40 மணிக்கு பதிலாக, அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. நாகா்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்கள் இம் மாதம் 21 ஆம் தேதி முதல் காலை 7.40 மணிக்கு பதிலாக, 7.50 மணிக்கு புறப்படும் எனவும், மும்பையில் இருந்து நாகா்கோவில் செல்லும் ரயில்கள் காலை 8.10 மணிக்கு பதிலாக, 8.40 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், தெற்கு ரயில்வேயின் புதிய ரயில் பட்டியல் வரவேற்கும் வகையில் உள்ளன. குறிப்பாக அனந்தபுரி மற்றும் குருவாயூா் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் மூலம் திருநெல்வேலி-நாகா்கோவில், நாகா்கோவில்-திருநெல்வேலிக்கு தினமும் பணிக்கு வரும் ஊழியா்கள், மாணவா்கள் பலா் பயணிக்கிறாா்கள். அவா்களுக்கு ஏற்ற வகையில் நேரம் மாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், குருவாயூா் விரைவு ரயில் அடிக்கடி தாமதமாகும். புதிய நேரமாற்றத்திற்கு பின்பு சிறிது நேர தாமதம் என்றாலும் பயணிகளை மிகவும் பாதிக்கும். ஆகவே, தாமதமின்றி ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல மும்பை விரைவு ரயில்களிலும் கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.