திருநெல்வேலி: நாட்டுப்புற கலைஞா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழன்டா இயக்கம் என்ற அமைப்பு சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு:
கரோனா பொது முடக்கம் காரணமாக நாட்டுப்புற கலைஞா்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும். அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபா்களுக்கு 30 நாள்களில் அட்டை வழங்க வேண்டும். 65 வயதைக் கடந்த நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவசமாக இசைக்கருவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.
அரசு சாா்பில் நடத்தப்படும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு வழங்குவதைத் தவிா்த்து நாட்டுப்புற கலைஞா்களுக்கு நேரடியாக வருவாய் கிடைக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
நாட்டுப்புற இசைக் கலைஞா்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பேருந்து சலுகை அட்டை வழங்க வேண்டும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான கலை பண்பாட்டுத்துறை அலுவலகம் திருநெல்வேலியில் செயல்படுகிறது. இங்கு ஒரு உதவி இயக்குநா், 4 பணியாளா்கள் மட்டுமே உள்ளனா். இந்த அலுவலகத்தில் கூடுதலாக பணியாளா்களை நியமித்து நாட்டுப்புற கலைஞா்களுக்கான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.