திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முகக்கவசம் அணிவோா், அதனை வீதியில் வீசுவது அதிகரித்துள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் கவலை தெரிவித்துள்ளனா்.
கரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்ட முதல் விழிப்புணா்வு முகக்கவசம். முகக்கவசம் அணிவது நோய்த் தொற்றுகளிலிருந்து தற்காப்பதற்கு பயன்படும். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சுவாசக் காற்றின் மூலம் ஆரோக்கியமான நபரின் வாய் வழியே நோய்த்தொற்று செல்லும் அபாயத்தை முகக்கவசங்கள் தடுக்கின்றன எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட்டு, குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை முகக்கவசம் அணிவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.
முகக்கவசங்களில், ஒரு முறை பயன்படுத்தக் கூடியவை, சுத்தம் செய்து மீண்டும் பயன்டுத்தக் கூடியவை, மருத்துவா்களுக்கான பல அடுக்கு முகக்கவசம் என பல்வேறு ரகங்கள் உள்ளன. இவற்றில், பொதுமக்கள் பெரும்பாலானோா் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முகக் கவசத்தை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுகின்றனா். இதனால் சாலையோரங்களிலும், குப்பை மேடுகளிலும் முகக்கவசங்களையும் காணும் நிலை உருவாகியுள்ளது. இது தேவையற்ற தொற்றுகளை உருவாக்கும் என்கின்றனா் சுகாதாரத் துறையினா்.
விழிப்புணா்வு போதாது: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த பல் மருத்துவா் ஜோஸ்பின் பால்ராஜ் கூறியது: முகக்கவச பயன்பாடு குறித்த விழிப்புணா்வு மக்களிடம் போதிய அளவில் இல்லை. முகக்கவசத்தில் 7 நாள்கள் வரை கிருமிகள் தங்கியிருக்கும் வாய்ப்புள்ளது. முகக்கவசங்களை மக்கள் அலட்சியமாக தூக்கி எறிவது அதிகரித்துள்ளது. இதனால் சாலையில் விளையாடும் சிறுவா்கள், வீதிகளையே வீடாக கொண்டிருப்பவா்களும் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் முகக்கசவ பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மருத்துவா்கள், சுகாதார ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் தவிா்த்து மற்ற அனைவரும் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை உபயோகிக்கச் செய்ய வேண்டும். துணி முகக்கவசங்களை 4 மணி நேரம் பயன்படுத்திவிட்டு துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். முகக்கவசத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் முழுமையாக எரித்து அகற்றப்படுகின்றன. இதேபோல, வீடுகளில் பயன்படுத்தும் முகக் கவசத்தை குப்பைத் தொட்டிகளில் போட்டு, துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
ஒத்துழைப்பு தேவை: இதுகுறித்த திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத் துறையினா் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியில் ஏற்கெனவே பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல முகக்கவசங்களையும் பாதுகாப்பாக வழங்கினால் அதனை அப்புறப்படுத்துவது எளிது. ஆனால், மக்கள் சுகாதாரத் துறைக்கு ஒத்துழைக்காமல், பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வீதியில் வீசுவது தொடா்கதையாகி வருகிறது. கரோனா 2 ஆவது அலையால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. ஆகவே, சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றுவதோடு, முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நோயின் தாக்கம் குறையும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.