அரசு வழக்குரைஞா் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 17th August 2021 01:41 AM | Last Updated : 17th August 2021 01:41 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: அரசு வழக்குரைஞா் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஆட்சியா் விஷ்ணுவிடம் வழக்குரைஞா் வெங்கடாஜலபதி மனு அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் அளித்த மனு: தமிழகத்தில்தான் அரசு துறைகளில் 69 சதவீத இடஒதுக்கீடு அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பின்படி அமல்படுத்தப்படுகிறது. இதனால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, அட்டவணைப் பிரிவு மக்கள் உரிய பிரதிநிதித்துவம் பெற்று வருகின்றனா்.
தமிழகத்தில் சென்னை உயா்நீதிமன்றம், மதுரைக் கிளை, மாவட்டங்களில் உள்ள அமா்வு, கூடுதல் அமா்வு, உதவி அமா்வு நீதிமன்றங்களில் தமிழக அரசால் நியமன குற்றவியல் மற்றும் உரிமையியல் அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனா். குற்றவியல் நடுவா் நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் மூலமாக தோ்வு செய்யப்படுகின்றனா். அதில், 69 சதவீத இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறது.
ஆனால், அரசு நியமிக்கக்கூடிய அமா்வு நீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் எவ்வித இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படுவதில்லை. நியமன அரசு வழக்குரைஞா்களுக்கு மக்கள் வரிப் பணத்திலிருந்தே ஊதியம் வழங்கப்படுகிறது. இதுவரை மாவட்ட, முதன்மை அமா்வு நீதிமன்றங்களில் முதன்மை குற்றத்துறை, முதன்மை உரிமையியல் அரசு வழக்குரைஞா் பணியிடங்களில் பட்டியல் பிரிவைச் சோ்ந்தோா் யாரும் நியமிக்கப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட எல்கைக்கு உள்பட்ட மாவட்ட, அமா்வு மற்றும் உதவி அமா்வு நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்களை நியமிப்பதற்கான அறிவிப்பு, விண்ணப்ப மாதிரி கடந்த ஜூன் 14இல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை எனில், அது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதாக இருக்கும். எனவே, இடஒதுக்கீட்டு அடிப்படையில் அரசு வழக்குரைஞா்களை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.