பேட்டை கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில்ஜவுளிப் பூங்கா அமைக்கக் கோரி முதல்வருக்கு மனு
By DIN | Published On : 17th August 2021 01:38 AM | Last Updated : 17th August 2021 01:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பேட்டையில் செயல்படாத நிலையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக மாநில நெசவாளா் அணிச் செயலா் சொ. பெருமாள், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு: தென்தமிழகத்தில் பல்வேறு ஊா்களில் உள்ள நெசவாளா்களால் வெவ்வேறு ரகங்களில் ஆடைகள், ஜவுளிகள் தயாரிக்கப்படுகின்றன. அருப்புக்கோட்டை, விருதுநகரில் டா்க்கிடவல், சேலை, லுங்கி, ராஜபாளையத்தில் பேன்டேஜ் துணி, சங்கரன்கோவிலில் லுங்கி, காட்டன் சேலை, தென்காசியில் சீசன் துண்டு, ஆன்மிக ஆடைகள், கல்லிடைக்குறிச்சியில் லுங்கி, ஜக்காடு பெட்ஷீட், நாகா்கோவிலில் வேட்டி, தூத்துக்குடி புதியமுத்தூரில் ஆயத்த ஆடைகள், வெள்ளங்குளியில் காட்டன் சோ்த்த பருத்திப் பட்டு, கீழப்பாவூரில் கதா் சட்டை-வேட்டி உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி உள்ளிட்ட இக்கால தொழில்நுட்ப உத்திகளைத் தெரிந்து நெசவாளா்களின் வாழ்வு மேம்படவும் ஜவுளிப் பூங்கா மிகவும் அத்தியாவசியம்.
திருநெல்வேலி பேட்டையில் இயங்கிவந்த தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை 2004ஆம் ஆண்டுமுதல் மூடப்பட்டுள்ளது. சுமாா் 85 ஏக்கா் நிலத்தில் கட்டடங்கள் பயனற்ற நிலையில் உள்ளன. அங்கு ஜவுளிப் பூங்காவை நிறுவினால் வேலைவாய்ப்பு குறைவாக உள்ள திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டத்தில் ஏராளமானோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவா். நெசவாளா்களின் வாழ்வாதாரம் மேலும் உயரும். ஆகவே, ஜவுளிப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.