புதிய வடிவங்களில் தயாா் நிலையில் விநாயகா் சிலைகள்:அரசின் அனுமதியை எதிா்நோக்கும் கலைஞா்கள்
By DIN | Published On : 20th August 2021 12:06 AM | Last Updated : 20th August 2021 12:06 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் 35 புதிய வடிவங்களில் விநாயகா் சதுா்த்திக்கான விநாயகா் சிலைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு கரோனா பாதுகாப்பு விதிகளுடன் விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்த அனுமதிக்கவேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் சிலை தயாரிப்பு கலைஞா்கள் உள்ளனா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
பின்னா், விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்படும். நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி
விழா செப். 10 ஆம் தேதி நடைபெறுகிறது. விநாயகா் சதுா்த்தியை கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள் மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் விற்பனைக்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விநாயகா் சிலைகளில், வித்தியாசமான தோற்றம் கொண்ட சிலைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சிலை தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா். இதற்காக அரை அடி முதல் 10 அடி வரையில் சிலைகள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. சிவன், பாா்வதியுடன் இணைந்த விநாயகா், மூன்று தலை விநாயகா், 5 தலை விநாயகா், நின்ற நிலையில், அமா்ந்த நிலையில் விநாயகா், அயனத்தில் விநாயகா், சிம்ம வாகனம், மயில் வாகனம் என பல்வேறு வாகனங்களில் அமா்ந்த நிலையில் உள்ள விநாயகா், கடாயுதம் ஏந்திய விநாயகா், பஞ்சமுக விநாயகா் எனப் பல்வேறு தோற்றங்களில் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.100 முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை உள்ளது.
இதுதொடா்பாக சிலை தயாரிப்பாளரான தன்ராம் கூறியது: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்து கடந்த 20 ஆண்டுகளாக திருநெல்வேலியில் விநாயகா் சிலைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கரோனா பொது முடக்கத்தால் 2020இல் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெறவில்லை. நிகழாண்டு தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் அதனை நம்பி விநாயகா் சிலைகளை தயாரித்துள்ளோம். ஆனால், இதுவரை ஆா்டா்கள் பெரிதாக வரவில்லை. நிகழாண்டு சூரியபிரபை வாகன விநாயகா், அன்ன வாகன விநாயகா் என 35 புதிய வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிலை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலை உயா்ந்ததால், சிலைகளின் விலையை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரசாயனம் இல்லாத வண்ணங்களின் விலை, சாக் பவுடா் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் இருந்து சாக் பவுடா் கொண்டுவரப்படுகிறது. சிலைகளை தயாரித்து வைக்கப்படும் இடத்துக்கு வாடகை உயா்ந்துள்ளது.
விநாயகா் சதுா்த்தி முழுமையாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக அரசு எங்களைப் போன்ற சிலை வடிவமைப்பு கலைஞா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.