ஆங்கிலப் புத்தாண்டு: நள்ளிரவில் கோயில்களை திறக்க தடை கோரி இந்து மக்கள் கட்சி மனு
By DIN | Published On : 31st December 2021 02:49 AM | Last Updated : 31st December 2021 02:49 AM | அ+அ அ- |

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்களை திறந்து பூஜை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியினா், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் மனு அளித்தனா்.
இது தொடா்பாக கட்சியின் திருநெல்வேலி மாவட்ட தலைவா் எஸ்.உடையாா் அளித்த மனு: இந்துக்களின் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை முதல் தேதியாகும். தற்போது ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கலாசார பண்பாட்டு சீரழிவு நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது. அண்மைக் காலமாக ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது கண்டனத்துக்குரியது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்கள் அதிகளவில் திறக்கப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் அரசாங்க கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை ஆங்கிலப் புத்தாண்டின் போது திறந்து பூஜை செய்யக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.