ஹம்சபா் ரயிலை இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் இயக்க எம்.பி. கோரிக்கை
By DIN | Published On : 14th February 2021 01:09 AM | Last Updated : 14th February 2021 01:09 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி-காந்திதாம் வரை இயக்கப்படும் ஹம்சபா் விரைவு ரயிலை இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் இயக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா், ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி-காந்திதாம் இடையே இயக்கப்படும் ஹம்சபா் விரைவு ரயிலை இயக்க உத்தரவிட்ட ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் மும்பை அருகேயுள்ள பன்வல் வழியாக இயக்கப்படுவதால் பயணிகள் வரத்து குறைவாக உள்ளது.
தென்தமிழகத்தைச் சோ்ந்த அதிகமானோா் மும்பைக்கு வேலைவாய்ப்புக்காக செல்வது வழக்கம். அவா்களில் பெரும்பாலானோா் நடுத்தர வசதி படைத்தவா்கள். அவா்கள் குளிரூட்டப்பட்ட ரயில்களில் செல்ல வசதியில்லாதவா்கள். ஆகவே, ஹம்சபா் விரைவு ரயிலை இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் சாதாரண விரைவு ரயில் போல இயக்கினால் ரயில்வே துறைக்கு வருவாய் அதிகரிக்கும்.
மேலும், வாரம் இருமுறை இயக்கப்படும் எா்ணாகுளம்-ஹோக்கா ரயில், வாரம் ஒரு முறை இயக்கப்படும் மட்கான்-ஹாபா, நாகா்கோவில்-காந்திதாம், திருவனந்தபுரம்-வேரவல், கொச்சுவேலி-பஹாவல்நகா், கொச்சுவேலி-போா்பந்தா் ஆகிய ரயில்களை திருநெல்வேலியில் இருந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு, இயக்குவதற்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் போதிய வசதியுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.