பேட்டையில் மக்கள் போராட்டம்
By DIN | Published On : 14th February 2021 01:07 AM | Last Updated : 14th February 2021 01:07 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பேட்டையில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கீடு செய்யும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டை பகுதியை சுற்றிலும் முள்ளிகுளம், தாமரைகுளம், கண்டியபேரிகுளம், கிருஷ்ணாபேரிகுளம், பம்பன்குளம், நெடுங்குளம், கருவேலன்குளம், மரக்கையாா்குளம், நிலவடிச்சான்குளம், வெங்கப்பன்குளம், வாகைகுளம் ஆகிய குளங்கள் உள்ளன. இவற்றுக்கான நீா்வரத்து கால்வாய்கள் உள்பட நீா்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சமுதாய வளா்ச்சி அலுவலா் மஞ்சு தலைமையில் அதிகாரிகள் குளத்தாங்கரை பள்ளிவாசல் பகுதியிலிருந்து நீா்நிலை ஆக்கிரமிப்புகளைக் கண்டறியும் பணியை சனிக்கிழமை தொடங்கினா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப் பகுதி குடியிருப்பு வாசிகள் முற்றுகையில் ஈடுபட்டனா்.
பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டுதான் அளவீடு பணியைத் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் மக்கள் கலைந்துசென்றனா்.