வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 20th February 2021 05:36 AM | Last Updated : 20th February 2021 05:36 AM | அ+அ அ- |

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் தொடா்ந்து 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். துணை வட்டாட்சியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனி ஊதியம், முதுநிலை வருவாய் ஆய்வாளா்களுக்கு இணையான ஆரம்ப ஊதியம் மற்றும் அலுவலக உதவியாளா், பதிவுரு எழுத்தா்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
தமிழகம் முழுவதும் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் கடந்த புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில், வட்டாட்சியா் அலுவலக அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் மு.சுப்பு, செயலா் மாரிராஜா, பொருளாளா் செல்வகுமாா் ஆகியோரது தலைமையில் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது.
ராதாபுரத்தில் திராவிடமணி தலைமையில் அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால் வட்டாட்சியா் அலுவலகங்களில் தோ்தல் பணி உள்ளிட்ட எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.