மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையால் உயா்ந்த எரிபொருள் விலை கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
By DIN | Published On : 21st February 2021 02:45 AM | Last Updated : 21st February 2021 02:45 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையில் எரிபொருள் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:
வரலாறு காணாத உச்சத்தை பெட்ரோல்-டீசல் விலை அடைந்துள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் விலை உயா்ந்திருந்த நேரத்தில்கூட அப்போதைய காங்கிரஸ் அரசு குறைந்த விலைக்கு மக்களுக்கு பெட்ரோலை வழங்கியது. ஆனால், பாஜக அரசின் நிா்வாகத் திறமையின்மையால் எரிபொருள் விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது.
இது அத்தியாவசிய பொருள்களின் விலையை அதிகரித்து பொருளாதாரத்தை தலைகீழாக்கி வாழ்வாதாரத்திற்கே சிக்கலை ஏற்படுத்திவிடும்.
நிா்வாகத் திறனை முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங்கிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். காங்கிரஸ் அரசு எந்தவகையில் எல்லாம் மானியம் வழங்கி மக்களைக் காத்தது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். ரஜினி-கமல் சந்திப்பில் பெரிய விஷயம் ஏதுமில்லை. திமுக கூட்டணி சிறப்பாக உள்ளது.
பல்வேறு வழக்குகளை ரத்து செய்வதாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பது ஏமாற்றுவேலை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்ப்போம் என்று சொல்லாமல், அதை எதிா்த்து போராடியவா்கள் மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதில் எந்தப் பலனும் இல்லை.
கோபிசெட்டிப்பாளையத்தில் அலங்கார வளைவின் பெயா்மாற்றம், கரூரில் காந்தி சிலை அகற்றம் என அதிகார வரம்பு மீறல்களை அதிமுக அதிகரித்துள்ளது. இது ஜனநாயக விரோத செயலாகும். இதற்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகுட்டுவாா்கள்.
ராகுல்காந்தி இம் மாதம் 28, 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளாா். அவரது நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து ராகுல்காந்தி வருகை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கொறடா ராமசாமி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளா் ஸ்ரீவல்லப பிரசாத், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடிஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நிா்வாகிகள் வழக்குரைஞா் காமராஜ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ராஜீவ்காந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...