நெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா
By DIN | Published On : 26th February 2021 09:39 PM | Last Updated : 26th February 2021 09:39 PM | அ+அ அ- |

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் அப்பர் தெப்ப திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சைவ சமயக்குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும் வகையில் அவரை கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான், "கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே' என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.
இதையடுத்து கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்பட்டது.
இந்த நிகழ்வை நினைவுக்கூரும் வகையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரை திருக்குளத்தில் அப்பர் தெப்ப திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் மலர் அலங்காரத்துடன் பொற்றாமரை குளம் தெப்பத்தில் அப்பர் பெருமான் எழுந்தருளினார். தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் அப்பர் பெருமான் தெப்பத்தில் வலம்வந்தார். பக்தர்கள் வெற்றிலையில் கற்பூர தீபமேற்றி தெப்பக்குளத்தில் விட்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...