பாளை. தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய முதியவரை தேடும் பணி தீவிரம்
By DIN | Published On : 03rd January 2021 12:34 AM | Last Updated : 03rd January 2021 12:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை திருமலைக்கொழுந்துபுரம் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய முதியவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை திருமலைக்கொழுந்துபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேலாயுதம்(75). இவா் வெள்ளிக்கிழமை மாலையில் அப்பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றுக்கு குளிக்கச் சென்றாராம்.
கடந்த 2 நாள்களாக ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், இவா் குளித்துக்கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ளவா்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து முதியவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.