காணும் பொங்கல்: களக்காடு மலைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அவசியம்
By DIN | Published On : 04th January 2021 12:05 AM | Last Updated : 04th January 2021 12:05 AM | அ+அ அ- |

காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக களக்காடு மலைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வந்து செல்வா் என்பதால், உரிய போலீஸ் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை, தேங்காய்உருளி, சிவபுரம், வடக்குப் பச்சையாறு அணை, திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள கொடுமுடியாறு அணை, மலை நம்பி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்வா்.
அதிகளவில் மக்கள் கூட்டம் குவிந்து விடுவதால் அங்கு வந்து செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவது, தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபடுவோரை கண்காணிப்பது, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொள்ள போலீஸ் பாதுகாப்பு அவசியமாகிறது.
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்காக வனத் துறையினா் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடா்பாக வனத் துறையினா் ஆலோசித்து வருகின்றனா்.
இந்நிலையில், காணும் பொங்கலை கொண்டாட மலைப் பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு, குடிநீா், கழிப்பிடம், பெண்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட வசதிகளை வனத் துறையினா் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், தலையணை நுழைவு வாயில், வடக்குப் பச்சையாறு அணை, கொடுமுடியாறு அணை, நம்பி கோயில் வனத் துறை சோதனைச் சாவடி வரையிலும் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.