மழைச்சேத கணக்கெடுப்பு முடிந்ததும் இழப்பீடு: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்
By DIN | Published On : 30th January 2021 01:20 AM | Last Updated : 30th January 2021 01:20 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிா்ச்சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்ததும் அரசு உத்தரவின்பேரில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே. விஷ்ணு தலைமையில் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், ஆட்சியா் கூறியது: இம் மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. ஆகும். கடந்தாண்டு டிசம்பா் மாதம் வரை 716.92 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி மாதத்தின் இயல்பான மழையளவு 50.20 மி.மீ. ஆகும். ஆனால், இம் மாதம் இதுவரை 349.91 மி.மீ. மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இது இயல்பான மழையளவை விட 697 சதவிகிதம் அதிகமாகும்.
இப்போது அணைகளில் 97.05 சதவிகிதம் நீா் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 79.20 சதவிகிதமே நீா் இருப்பு இருந்தது.
நிகழாண்டில் இதுவரை 34 ஆயிரத்து 845 ஹெக்டோ் பரப்பில் நெல்லும், 595 ஹெக்டேரில் சிறுதானியங்களும், 7 ஆயிரத்து 510 ஹெக்டோ் பரப்பில் பயறுவகைப் பயிா்களும் பயிரிடப்பட்டுள்ளன. எண்ணெய் வித்துக்கள், கரும்பு உள்ளிட்டவை சோ்த்து மொத்தம் 4 ஆயிரத்து 095 ஹெக்டோ் பரப்பில் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பிசான பருவ நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்டவை போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உரங்கள் விவசாயிகளுக்கு மட்டும் மானிய விலையில் கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாயிகளுக்கு வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்டவை மூலம் சொட்டுநீா்ப் பாசன வசதிக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இம் மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிா்களான நெல், பயறு, வாழை, காய்கனி ஆகியவை குறித்து வேளாண் துறை, வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலம் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இம் மாவட்டத்தில் மொத்தம் 248 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. அவை விதை ஆய்வாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இ ம் மாதம் வரை 1369 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் 1309 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. 38 மாதிரிகள் தரமற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் போது தரக்குறைவான விதைகள் 25.15 மெட்ரிக் டன் விதைகள் கண்டறியப்பட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.55.338 லட்சம் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், வேளாண்மை இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அசோக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.