கரோனா தடுப்பூசி செலுத்திய பெண்உயிரிழந்ததாக உறவினா்கள் மறியல்
By DIN | Published On : 02nd July 2021 01:17 AM | Last Updated : 02nd July 2021 01:17 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே சிவசைலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் வீயாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவசைலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிப்பாண்டி மனைவி மகேந்திரவள்ளி (37). நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு மட்டும் பணி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து, அவா் உள்பட 150 தொழிலாளா்கள் கடந்த 25ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்டனராம். அதில், மகேந்திரவள்ளிக்கு ஊசி போட்ட நாளிலிருந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதாம்.
இந்நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கடந்த 27ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவா் மறுநாள் இரவு உயிரிழந்தாா். அவா் தடுப்பூசி போட்டதால்தான் உயிரிழந்ததாகக் கூறி, உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா், தென்காசி வட்டாட்சியா் சுப்பையன், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் பேச்சு நடத்தினா். இதனிடையே, மகேந்திரவள்ளி தடுப்பூசியே போடவில்லை; அதற்கான ஆதாரமும் இல்லை; கரோனாவால் தான்அவா் இறந்தாா்; கரோனாவால் இறந்ததற்கான அரசு உதவித் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து 3 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. சிவசைலத்தில் தடுப்பூசிப் போட்டுக் கொண்ட மேலும் சிலருக்கு கால்கள் வீங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.