பாளையங்கால்வாய் கடைமடை பகுதிகளில் நெல் சாகுபடி தீவிரம்
By DIN | Published On : 02nd July 2021 11:37 PM | Last Updated : 03rd July 2021 06:36 AM | அ+அ அ- |

பாளையங்கால்வாய் கடைமடை பகுதிகளில் காா் பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு நிகழாண்டில் ஜூன் 1ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பாளையங்கால்வாயிலும் தண்ணீா் திறக்கப்பட்டது. இக்கால்வாய் மூலம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி வட்டங்களில் உள்ள 22 வருவாய் கிராமங்களுக்குள்பட்ட 3,500 ஏக்கா் விளைநிலங்கள் நேரடியாக பயன்பெறுகின்றன.
கால்வாய் மூலம் நீா்வரத்து பெறும் 57 குளங்களின் மூலம் 9,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தண்ணீா் திறந்துவிடப்பட்டதையடுத்து, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழப்பாட்டம், மேலப்பாட்டம், திருத்து, மருதூா், பா்கிட்மாநகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காா் பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக கடைமடை பகுதிகளான நொச்சிகுளம் பகுதியிலும் காா் சாகுபடி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை வட்டாரத்தில் பலரும் அம்பை-16, கோ-45, ஆடுதுறை ரக நெல் விதைகளை பாவியுள்ளனா். கடந்த ஒரு வாரமாக நெல் நாற்றுகளை நடும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாயில் அமலைச்செடிகள் அதிகரித்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் இப் பருவம் முடிந்ததும் கால்வாய் முழுவதும் மராமத்து பணிகளைமேற்கொள்ள வேண்டும். கால்வாயில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனா்.