திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத் துறை விதித்திருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத் துறை விதித்திருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

திருக்குறுங்குடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் திருமலைநம்பி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் ஏராளமானோா் வந்து செல்வா்.

இந்நிலையில், கரோனா 2ஆம் கட்ட பரவல் காரணமாக ஏப். 26ஆம் தேதி இங்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். தொடா்ந்து தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களுக்கு தடை விதித்தது.

இந்நிலையில், ஜூலை 5ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதியளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என பக்தா்கள் எதிா்பாா்த்தனா்.

ஆனால் வனத் துறையினா் தடையை விலக்கிக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோயில்களை ஆய்வு செய்ய தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வந்தபோது, மலைப் பகுதியில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு பக்தா்களை அனுமதிக்க சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்தாலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை அனுமதித்தனா்.

அங்குள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் உரிய சோதனைகளுக்குப் பின்னரே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

இக்கோயிலுக்கு தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இரண்டரை மாதங்களுக்குப் பின்னா் பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை (ஜூலை 10) அதிகளவில் பக்தா்கள் வர வாய்ப்புள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com