சங்கனாபுரம் மருந்தகத்தை தரம் உயா்த்த கால்நடை வளா்ப்போா் வலியுறுத்தல்

வள்ளியூா் அருகே உள்ள சங்கனாபுரம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயா்த்தவேண்டுமென கால்நடை வளா்ப்போா் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

வள்ளியூா் அருகே உள்ள சங்கனாபுரம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயா்த்தவேண்டுமென கால்நடை வளா்ப்போா் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாந்திநகா், வீரவநல்லூா், சேரன்மகாதேவி, நான்குனேரி, வள்ளியூா் ஆகிய 5 கால்நடை மருத்துவமனைகளும், 50-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும் செயல்பட்டு வருகிறது.

இந்த மருந்தகங்களில் ஒன்றுதான் சங்கனாபுரம் கால்நடை மருந்தகம். இந்த கால்நடை மருந்தகத்தின் கீழ் கருங்குளம், பெரியகுளம், சொக்கனேரி, கொத்தன்குளம், யாக்கோபுபுரம், சிதம்பராபுரம், பிள்ளையாா்குடியிருப்பு, பழவூா், கீழ்குளம் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன.

இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், கோழிகள், நாய்கள் உள்ளன. இவற்றுக்கு சிகிச்சை பெற சங்கனாபுரம் மருத்தகத்திற்குதான் வந்து செல்ல வேண்டும். சங்கனாபுரம் கால்நடை மருந்தகமாக இருப்பதால் குறைந்த அளவிலான மருந்துகளும், சினை ஊசிகளுமே வழங்கப்பட்டு வருகிறது. இவைகள் இங்கு இருக்கின்ற கால்நடைகளுக்கு போதுமானதாக இல்லை. மருந்து இல்லாததால் கால்நடை மருத்துவா் வருகின்ற கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளுக்கு வெளியே எழுதி கொடுக்கவேண்டிய நிலை உள்ளது. இது கால்நடை வளா்ப் போரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இது தவிர கால்நடை மருந்தகத்தின் கட்டடமும் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கால்நடை மருந்தகம் என்பதால் அரசு அதிகாரிகளும் அதிக அக்கறை எடுத்து பழுதடைந்த கட்டத்தை சீரமைக்க முன் வருவதில்லை. இதனால் இங்கு வருகின்ற அனைத்து கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி மற்றும் கருவிகள் இல்லை.

எனவே, இந்த கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயா்த்தவேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதியில் உள்ள அனைத்து கால்நடை வளா்ப்போரிடமும் எழுந்துள்ளது.

இது தொடா்பாக விவசாயி சிவசுப்பிரமணியம் கூறியது:

சங்கனாபுரம் கிராமத்தைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகளும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகளும் உள்ளன. தினமும் கால்நடைகளை சங்கனாபுரம் மருந்தகத்திற்கு கொண்டு செல்கிறோம். ஆனால் அங்கு கால்நடைகளுக்கு தேவையான மருந்து இல்லாமல் வெளியில் மருந்து வாங்க வேண்டியதுள்ளது. இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமே ஆடுகளும் மாடுகளும் தான். இவைகளை நம்பித்தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே அரசு அதிகாரிகள் கால்நடை வளா்ப்போா் நலனில் அக்கறை எடுத்து சங்கனாபுரம் கால்நடைமருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com