ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th July 2021 12:06 AM | Last Updated : 09th July 2021 12:06 AM | அ+அ அ- |

எஸ்ஆா்எம்யூ (சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியன்) சாா்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், ‘விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே உற்பத்தி மற்றும் பராமரிப்புப் பணிமனைகளை தனியாா், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது; ரயில்வே மைதானங்கள், குடியிருப்புகளை விற்பனை செய்யக் கூடாது; 41 பாதுகாப்பு உற்பத்தி பணிமனைகளை 7 பெருநிறுவனங்களாக மாற்றி 76 ஆயிரம் ஊழியா்களின் நிரந்தர வேலையைப் பறிக்கக் கூடாது; இடிஎஸ்ஓ என்ற அவசரச் சட்டம் மூலம் பாதுகாப்புத் துறை ஊழியா்களின் வேலைநிறுத்த உரிமையைப் பறிக்கக் கூடாது’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்திற்கு எஸ்.ஐயப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.கணேசன், எஸ்.தமிழரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டத் தலைவா் என்.சுப்பையா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சுந்தா், மாரிதாஸ், மகாராஜன், கண்ணன், ராமசுப்பிரமணியன், வெங்கட்ராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா். எஸ்.சிவபெருமாள் நன்றி கூறினாா்.