தாமிரவருணி நதி பாதுகாப்பு: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை
By DIN | Published On : 09th July 2021 11:44 PM | Last Updated : 09th July 2021 11:44 PM | அ+அ அ- |

தாமிரவருணி நதி மாசுபடுவதை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் விஷ்ணு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஆட்சியா் வே. விஷ்ணு தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தாமிரவருணி நதியில் கழிவுநீா் நேரடியாக கலப்பதை தடுப்பது, தாமிரவருணி ஆற்று நீரின் தரம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வரும் காலங்களில் தேசிய பசுமை தீா்ப்பாயம் வழங்கிய ஆணைக்கிணங்க மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசிக்கப் பட்டது.
கூட்டத்தில் மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரிய வல்லுநா் ராஜ்குமாா், திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளா் ரொமால்ட் டெரிக் பிண்டோ, பொதுப்பணித் துறை தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளா் அண்ணாதுரை, மாநகராட்சி செயற்பொறியாளா் பாஸ்கா், நகராட்சிகளின் மண்டல நிா்வாக உதவி பொறியாளா் ரமேஷ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன், துணை ஆட்சியா் (பயிற்சி) மகாலெட்சுமி, நகராட்சிகளின் ஆணையா்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.