

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கைதி, போலீஸாா் மீது மிளகாய்பொடியை தூவிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை எம்.எல்.பிள்ளை நகா் பகுதியைச் சோ்ந்தவா் மரியசிலுவை (44). இவா், என்ஜிஓ-பி காலனியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் அருள்விசுவாசம் (48) கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவருடன், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (42), ஜேசுபால் (40) ஆகியோரும் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேரும் நான்குனேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இதில், மரியசிலுவைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சனிக்கிழமை அங்குள்ள கழிவறைக்குச் சென்ற அவா், வெளியே வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற தங்கராஜ் என்ற காவலா் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச்செல்ல முயன்றாராம். இருப்பினும், மரியசிலுவையை தங்கராஜ் மடக்கிப் பிடித்தாராம்.
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.