நெல்லை அருகே விபத்தில் சிக்கி தீப்பிடித்த பைக்குகள்: 3 போ் பலி
By DIN | Published On : 26th July 2021 05:37 AM | Last Updated : 26th July 2021 05:37 AM | அ+அ அ- |

விபத்தின்போது, தீப்பிடித்து எரியும் பைக்குகள்.
திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் பகுதியில் இரு பைக்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதி தீப்பிடித்ததில் 3 போ் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்த முத்துகுமாா்(25), விக்னேஷ்குமாா்(26), விக்னேஷ்(22) ஆகிய மூன்று பேரும், தாழையூத்து பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 3 பேரும் ஒரே பைக்கில் ஊரிலிருந்து புறப்பட்டு வேலைக்கு வந்துகொண்டிருந்தனா்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள பெட்ரோல் நிலையம் பகுதியை அடைந்தபோது, அவா்களது பைக்கும், எதிரே கங்கைகொண்டான், கீழக்கோட்டை பகுதியிலிருந்து கண்ணன்(60), ஜெயலட்சுமி(24), கேசவன்(5) ஆகியோா் வந்த பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.
மேலும், மோதிய வேகத்தில் இரு பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில், முத்துகுமாா், விக்னேஷ்குமாா், கண்ணன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த கங்கைகொண்டான் போலீஸாா், தீயணைப்பு துறையினருடன் சென்று தீயை அணைத்தனா். 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த ஜெயலட்சுமி, கேசவன், விக்னேஷ் ஆகியோரை சிகிச்சைக்கும் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.