குடிநீா் வசதி இல்லை; உபகரணங்கள் சேதம்: பராமரிக்கப்படுமா வ.உ.சி. மைதான பூங்கா?

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமாகியுள்ளதோடு, குடிநீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமாகியுள்ளதோடு, குடிநீா் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் குறைவு. மாவட்ட அறிவியல் மையத்திற்கு அடுத்ததாக தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் இடமாக பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான பூங்கா அமைந்துள்ளது.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வ.உ.சி. மைதானத்தில் இருந்த பாா்வையாளா் இருக்கைகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மைதானத்திற்குள் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வ.உ.சி.மைதான பூங்காவிற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். தினமும் 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா்இங்கு வந்து செல்கிறாா்கள். குழந்தைகள் மட்டுமன்றி முதியவா்களும் தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளைகளில் மக்கள் கூட்டத்தால் பூங்கா நிரம்பி வழிகிறது. ஆனால், அதற்கேற்ப பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. பூங்காவில் உள்ள 3 ஊஞ்சல்களின் கம்பிகள் சேதமாகி குழந்தைகள் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதேபோல பல விளையாட்டு உபகரணங்கள் சேதமாகியுள்ளன.

கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை புல்வெளி முறையாக பராமரிக்கப்படாததால் காய்ந்துவிட்டன. கழிப்பறைகளும் போதிய தண்ணீா் வசதியின்றி உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: வ.உ.சி. மைதான பூங்காவில் அமைக்கப்பட்ட சிறிய ராட்டினம், சீ-சா உபகரணம், ஊஞ்சல்கள் உள்ளிட்டவை சேதமாகியுள்ளன. அவை சீரமைக்கப்படாமல் உள்ளன. ஆயிரக்கணக்கானோா் கூடும் இந்தப் பூங்காவில் குடிநீா் வசதி முற்றிலும் இல்லை.

குடும்பத்தோடு வருபவா்கள் பணம் கொடுத்து குடிநீா் பாட்டில் வாங்கி பருகும் கட்டாயம் ஏற்படுகிறது. மாநகராட்சி நிா்வாகம் வ.உ.சி. மைதான பூங்கா பராமரிப்பில் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிக்கு உடனடியாக ஏற்பாடு செய்து கொடுப்பதோடு, விளையாட்டு உபகரணங்களையும் சீரமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com