முன்களப் பணியாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 09th June 2021 07:11 AM | Last Updated : 09th June 2021 07:11 AM | அ+அ அ- |

வட்டார முன்களப் பணியாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கடையம் வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா் தலைமை வகித்தாா். கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மாணிக்கவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீ மூலநாத நாதன், முன்களப் பணியாளா்களிடம் மக்களிடையே காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம், சுவை உணா்வு இழத்தல், வாசனை தெரியாமல் இருத்தல், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை பெறவும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பு போட்டு கழுவிக் கொள்வது போன்ற பழக்கங்களை வழக்கப்படுத்திக் கொள்ளவும், தன்னிச்சையாக மருந்து மாத்திரைகள் வாங்கி சிகிச்சை பெறக்கூடாது, பதிவு பெறாத மருத்துவா்களிடம் சிகிச்சை பெறக்கூடாது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
களஆய்வு மேற்கொள்ளும்போது ஆக்சிஜன் நிலை குறைந்து காணப்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.