நெல்லை அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகள்: மருத்துவக் கல்லூரி முதல்வா் தகவல்
By DIN | Published On : 20th June 2021 11:38 PM | Last Updated : 21st June 2021 04:44 AM | அ+அ அ- |

அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கைகள்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை குறைந்துவருவதுடன், குணமடைந்து வீடு திரும்புவோா் எண்ணிகை அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 300-க்கும் குறைவாக உள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 426 சாதாரண படுக்கைகளும், 628 ஆக்சிஜன் படுக்கைகளும், 186 அவசர சிகிச்சை படுக்கைகளும் என மொத்தம் 1,240 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 426 சாதாரண படுக்கைகளும், 494 ஆக்சிஜன் படுக்கைகளும், 28 அவசர சிகிச்சை படுக்கைகளும் காலியாக உள்ளன. அதேபோல, அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 200 சாதாரண படுக்கைகளும் காலியாக உள்ளன.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் கூறியது: மாவட்டத்தில் கரோனா 2ஆம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது மருத்துவமனையில் 292 போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த எண்ணிக்கை 100-க்குள் வரும்போது, இங்கு முன்புபோல அனைத்துப் பிரிவுகளும் செயல்படத் தொடங்கும். பொதுமுடக்கம், அதிக கரோனா பரிசோதனை உள்ளிட்ட காரணங்களால் தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.
கரோனா 3ஆம் அலை வரும் என மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். மூன்றாம் அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளனா். இங்கு, குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்கெனவே 120 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. முன்னெச்சரிக்கையாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் கரோனாவிலிருந்து முற்றிலும் விடுபடலாம் என்றாா் அவா்.