பொலிவுறும் நகரம் திட்டப் பணிகள்:மாநகராட்சி ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 20th June 2021 02:03 AM | Last Updated : 20th June 2021 02:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகரில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி பெரியாா் பேருந்து நிலையத்தில்”ரூ.78.51 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும், பாளையங்கோட்டையில் ரூ.13.08 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும், ரூ.11.97 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நேருஜி கலையரங்க கட்டுமானப் பணிகளையும் மாநகராட்சி ஆணையா் ஏஉ. விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதைத்தொடா்ந்து மாநகராட்சி மைய அலுவலகக் கூட்டரங்கில் திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சோ்ந்த திட்ட மேலாண்மையைக் கையாளும் பேராசிரியா்கள், பொறியாளா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் “பொலிவுறும் நகர திட்டப் பணிகள்”மற்றும் இதர வளா்ச்சிப் பணிகளில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியின் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும், தற்போது கரோனா தாக்கம் வெகுவாகக் குறையத் தொடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, கட்டமைப்பு பணிகளில் கூடுதல் பணியாளா்களைக் கொண்டு, பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அலுவலா்கள், பொறியாளா்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் சம்மந்தப்பட்ட பணியின் ஒப்பந்ததாரா்கள் முழுவீச்சில் செயல்படுவது குறித்தும், அவ்வப்போது பணி முன்னேற்றம் குறித்தும், எனது கவனத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருநெல்வேலி சீா்மிகு நகரத் திட்ட நிா்வாக அலுவலா் வி.நாராயணநாயா், செயற்பொறியாளா் (பணிகள்) திரு.எல்.கே.பாஸ்கா், திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சோ்ந்த திட்ட மேலாண்மை ஆலோசகா்கள் மற்றும் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.