களக்காட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
By DIN | Published On : 20th June 2021 02:11 AM | Last Updated : 20th June 2021 02:11 AM | அ+அ அ- |

களக்காடு பேரூராட்சி 4ஆவது வாா்டு பகுதியான வியாசராஜபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்.
களக்காடு பேரூராட்சிப் பகுதியில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இப் பேரூராட்சியில் 4ஆவது வாா்டு வியாசராஜபுரத்தில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக 25 வயது இளைஞா் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தாா். மேலும் சிலா் டெங்கு, டைபாய்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா்.
இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு ஆகியோா் அடங்கிய குழுவினா் நோய்த் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினா். வியாசராஜபுரம் பள்ளிவாசல் தெருவில் கடந்த வாரம் காய்ச்சல், சளி, இருமல் பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் 67 பேருக்கு கரோனா பரிசோதனையும் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 32 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கூறியது: நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால், தற்போது பேரூராட்சிப் பகுதியில் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது என்றாா் அவா்.