நுண்ணீா் பாசனம்:மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
By DIN | Published On : 24th June 2021 11:52 PM | Last Updated : 24th June 2021 11:52 PM | அ+அ அ- |

சேரன்மகாதேவி வட்டாரத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த மானிய விலையில் மழைத் தூவான், தெளிப்பு நீா்க் கருவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பக ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேரன்மகாதேவி வட்டாரத்தில் பிரதம மந்திரி திட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் தெளிப்பு நீா் கருவி, மழைத் தூவான்ஆகியவை மானிய விலையில்
விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதம், இதர விவசாயிகளுக்கு 75 சதமும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல், நிலம் வரைப்படம், சிறு விவசாயி சான்று, நீா் மண் பகுப்பாய்வு, வங்கிக் கணக்குப் புத்தக நகல் போன்ற ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பதிவு எண் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தோ்வு செய்தபின், விலைப்புள்ளி தயாரித்துப் பணி ஆணை வழங்கப்படும். திட்டத்தில் சிறு, குறு, பொது, ஆதி திராவிடா், மகளிா் மற்றும் இதர விவசாயிகளும் பங்கு பெறலாம். அதிகபட்சமாக 12.5 ஏக்கா் வரை பயன்பெறலாம். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.