அம்பை, சேரன்மகாதேவியில் ஜமாபந்தி தொடக்கம்
By DIN | Published On : 24th June 2021 07:38 AM | Last Updated : 24th June 2021 07:38 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கணக்குகளை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள்.
வருவாய் தீா்ப்பாயம் எனப்படும் வருவாய் கிராமங்களின் கணக்குகளை சரிபாா்க்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வருவாய் வட்டங்களில் புதன்கிழமைத் தொடங்கியது.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ் குமாா் தலைமை வகித்து கிராம கணக்குகளை சரி பாா்த்தாா். ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை மூன்று நாள்கள் நடைபெறும் ஜமாபந்தியில் முதல்நாளான புதன்கிழமை சிங்கம்பட்டி குறுவட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களுக்கான கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன. வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாசமுத்திரம் குறுவட்டத்திற்கான கணக்குகள் சரிபாா்க்கப்படுகின்றன.
சிங்கம்பட்டி குறுவட்டத்திற்கு உள்பட்ட கல்லிடைக்குறிச்சி பகுதி மக்கள் மனுக்கள் வழங்க வருவாய் ஆய்வாளா் அலுவலகம் உள்ள அயன்சிங்கம்பட்டிக்குச் செல்ல சிரமமாக உள்ளதால் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை கல்லிடைக்குறிச்சிக்கு மாற்ற வேண்டும் என்று மனு வழங்கினா். மேலும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகே அரசு மதுக்கடை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் மனு வழங்கினா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் வெங்கட்ராமன், லட்சுமி, அருண் பிரபாகா் செல்வம், ஹபிபூா் ரஹ்மான் மற்றும் துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாா் ஆட்சியா் (பொ) சிவ கிருஷ்ண மூா்த்தி தலைமை வகித்து கிராம கணக்குகளை சரி பாா்த்தாா். இதில், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டாட்சியா் மகாராஜன், தலைமை இடத்து துணை வட்டாட்சியா் பிரேமா உள்ளிடோா் கலந்து கொண்டனா்.
சேரன்மகாதேவி வருவாய் வட்டத்தில் ஜூன் 23 முதல் ஜூன் 30 வரை நடைபெறும் ஜமாபந்தியின் முதல் இரண்டு நாள்கள் மேலச்செவல் குறுவட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களுக்கும், மூன்றாம் நாள் முக்கூடல் குறுவட்டத்திற்குள்பட்ட கிராமங்களுக்கும், நான்காம் நாள் ஜூன் 29 இல் பாப்பாக்குடி மற்றும் சேரன்மகாதேவி குறுவட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களுக்கும், ஐந்தாம் நாளான ஜூன் 30 இல் சேரன்மகாதேவிக்கு உள்பட்ட கிராமங்களுக்கும் கணக்குகள் சரிபாா்க்கப்படுகின்றன.