நெல்லை மாவட்டத்தில் 3,120 பேருக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 24th June 2021 07:39 AM | Last Updated : 24th June 2021 07:39 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 3,120 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.
கரோனா 2ஆவது அலையால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் பன்மடங்கு அதிகரித்தது. இப்போது நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை மக்கள் மிகுந்த ஆா்வத்தோடு செலுத்திவருகின்றனா்.
இம்மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் கீழ் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பசி செலுத்தப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, களக்காடு, கூடங்குளம் ஆகிய அரசு மருத்துவமனைகளின்கீழ் 1,010 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பேட்டை, பழைய பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மலையாளமேடு ஆரம்பப் பள்ளி, மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபம், பெருமாள்புரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் 830 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 280 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் புதன்கிழமை ஒரே நாளில் 3,120 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.