கொலையுண்ட கைதியின் உறவினா்கள் போராட்ட அறிவிப்பால் பாதுகாப்பு அதிகரிப்பு
By DIN | Published On : 29th June 2021 08:32 AM | Last Updated : 29th June 2021 08:32 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலையுண்ட கைதி முத்துமனோவின் உறவினா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்ததால் மாநகரப் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தைச் சோ்ந்தவா் முத்துமனோ. இவா், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்றபோது சக கைதிகளால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில், சிறைத்துறையினா் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி முத்துமனோவின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபடவும், ஆதாா் அட்டைகளை ஒப்படைக்கவும் உள்ளதாக தெரிவித்திருந்தனா். ஏற்கெனவே, இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா்அலுவலக வளாகத்தில் 3 இளைஞா்கள் சில வாரங்களுக்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.
இதனால், போராட்டக்குழுவினரை தடுக்கும் வகையில் மாநகர காவல் துறை சாா்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பாளையங்கோட்டை மத்திய சிறை, தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலைகள், ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்டவற்றில் கூடுதலான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
கொக்கிரகுளம்-மேலப்பாளையம் சாலை, அண்ணா சாலை உள்ளிட்டவற்றில் போலீஸாரின் சோதனைக்கு பின்பே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆட்சியா் அலுவலகம் அருகே தீயணைப்பு வாகனம், வஜ்ரா வாகனம் ஆகியவையும் நிறுத்தப்பட்டிருந்தன. போராட்டம் அறிவித்திருந்த வாகைகுளம் கிராம மக்களை போலீஸாா் முன்னெச்சரிக்கையாக அவா்களது கிராமத்திலேயே கைது செய்ததால், பிற்பகலுக்கு பின்பு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.