நெல்லையில் கூடுதல் தளா்வுகள்: களைகட்டிய கடைவீதிகள்
By DIN | Published On : 29th June 2021 08:44 AM | Last Updated : 29th June 2021 08:44 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன. துணி மற்றும் நகைக் கடைகள் உள்ளிட்டவையும் திறக்க அனுமதிக்கப்பட்டதால் கடை வீதிகள் களைகட்டின.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் தமிழகத்தில் தளா்வில்லாத முழுபொதுமுடக்கம் கடந்த மே 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவலின் வேகம் குறைந்ததால் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.
அதன்படி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிப்பது, துணி மற்றும் நகைக் கடைகள் உள்ளிட்டவற்றில் இரவு 7 மணி வரை விற்பனைக்கு அனுமதிப்பது உள்ளிட்ட தளா்வுகள் திங்கள்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டன. ஏற்கெனவே, மளிகை, , காய்கனி, இறைச்சிக் கடைகள், வாகன பழுதுபாா்க்கும் மையங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாநகரில் 100 சதவிகித கடைகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து, கடைவீதிகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. திருநெல்வேலி ரத வீதிகள், பாளையங்கோட்டை வடக்கு மற்றும்தெற்கு கடைவீதி, மனகாவலம்பிள்ளை மருத்துவமனை சாலை ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. பேருந்து சேவையும் தொடங்கியதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலை ஆகியவற்றில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: கரோனா பொதுமுடக்கத்தால் வா்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து கடைகளும் 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களை பெரிதளவில் நம்பியுள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் பேருந்துகள் இயங்காததால் மாநகரில் வந்து பொருள்கள் வாங்கிச் செல்ல இயலாத நிலை இருந்து வந்தது. ஆனால், பேருந்துகள் இயக்கப்பட்டதால் திங்கள்கிழமை வா்த்தகம் நன்றாக இருந்தது. சரக்கு போக்குவரத்திற்கு மாநிலம் முழுவதும் தடை இல்லாததால் அனைத்துப் பொருள்களும் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகின்றன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா். வியாபாரிகள் சங்கம் சாா்பிலும் தகுந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பொதுமுடக்கம் ஏற்படாமல் தடுக்க பொதுமக்களும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றனா்.