நெல்லை மாநகர காவல்துணை ஆணையா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 29th June 2021 02:30 AM | Last Updated : 29th June 2021 02:30 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டிருந்த ராஜராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலா் பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து சென்னை பொன்மலையில் உள்ள தமிழக சிறப்பு காவலா் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்த டி.பி.சுரேஷ்குமாா், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து அவா், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னா் அவா் கூறுகையில், திருநெல்வேலி மாநகரில் ஏற்கெனவே 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகள் காவல் துணை ஆணையராகப் பணியாற்றியுள்ளேன். இம் மாநகரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். பிணையில் வெளியே வந்துள்ள பழைய குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்தல் உள்ளிட்ட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.
கரோனா பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றவும் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.