பாளை. சிறைக் கைதி கொலை சம்பவம்:குடும்பஅட்டை, ஆதாா் அட்டை ஒப்படைக்க வந்த கிராம மக்கள் கைது
By DIN | Published On : 29th June 2021 02:29 AM | Last Updated : 29th June 2021 02:29 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து குடும்பஅட்டை, ஆதாா் அட்டை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்
வேள்ளியூா்: பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் கிராம மக்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்க திங்கள்கிழமை வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தைச் சோ்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ(27). இவா் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சக கைதிகளால் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து அவரது உறவினா்கள் அவரது உடலை வாங்கமறுத்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இப்போராட்டத்தின் தொடா்ச்சியாக வாகைகுளம் கிராம மக்கள் 125 போ் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்க புறப்பட்டு வந்தனா்.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ், வட்டாட்சியா் இசக்கிபாண்டி மற்றும் போலீஸாா் கிராம மக்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அந்தப் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.
பின்னா் அனைவரையும் விடுவித்து கிராமத்துக்கு திருப்பி அனுப்பிவைத்தனா்.
தென்காசி, ஜூன் 28: சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசியில் கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 22-4-2021இல் கைதிகளால் முத்துமனோ கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தை கண்டித்தும்,
சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கம் சாா்பில் தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் எம். முருகேஷ் தலைமை வகித்தாா். பின்னா், கோரிக்கைகளை வலியறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.