பாளை. ஜவாஹா் மைதான வாடகை வாகனநிறுத்தங்களை அப்புறப்படுத்தக் கூடாது: ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 29th June 2021 02:31 AM | Last Updated : 29th June 2021 02:31 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஜவாஹா் மைதானத்தில் வாடகை வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி, அங்கு விரிவாக்க பணிகள் செய்யும் திட்டத்தை கைவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பாளையங்கோட்டை ஜவாஹா் மைதானத்தில் வாடகை வாகனங்களை நிறுத்தியுள்ள ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:
பாளையங்கோட்டை நகருக்குள் திறந்தவெளியாக உள்ள இடங்கள் மிகவும் குறைவு. அங்குள்ள ஜவாஹா் மைதானத்தில் வாடகை வாகனங்களான காா்கள், வேன்கள், மினி லாரிகள், ஆட்டோக்கள் ஆகியவை பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. தசரா காலத்தில் ராட்டினங்கள் அமைக்கும் இடமாகவும் இம் மைதானம் திகழ்ந்து வருகிறது.
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் காந்திஜி தினசரி சந்தையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ள நிலையில், ஜவாஹா் மைதானத்தில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
வாடகை வாகன நிறுத்தத்தை அந்த மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினால் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே, மாவட்ட ஆட்சியா் இவ் விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.