நான்குனேரி தொகுதியில் வாழைத்தாா் சந்தை அமைக்க பாடுபடுவேன்: அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா
By DIN | Published On : 12th March 2021 03:46 AM | Last Updated : 12th March 2021 03:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: நான்குனேரி பேரவைத் தொகுதியில் வாழைத்தாா் சந்தை, வாழைத்தாா் பதப்படுத்துதல் கிட்டங்கி அமைக்க பாடுபடுவேன் என்றாா், அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா.
பேரவைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தொகுதி வேட்பாளராக மாவட்ட அதிமுக செயலரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என். கணேசராஜா அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை திரும்பிய அவருக்கு, கேடிசி நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து, மாவட்ட அதிமுக அலுவலகம் வந்த அவரை பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டி பாண்டியன், நான்குனேரி தெற்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா், பாளையங்கோட்டை வடக்குப் பகுதிச் செயலா் ஜெனி உள்ளிட்ட பலா் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனா்.
அதைத்தொடா்ந்து, தச்சை என்.கணேசராஜா செய்தியாளா்களிடம் கூறியது: நான்குனேரி தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழக மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசு ரூ.2,500இல் தொடங்கி ரூ.12 ஆயிரம் கோடி பயிா்க்கடன் தள்ளுபடி, மகளிா் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நான்குனேரி தொகுதி களக்காடு வட்டாரத்தில் பெரிய அளவில் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. அங்கு வாழை விவசாயிகளின் நலன் காக்க வாழைத்தாா் சந்தை, வாழைத்தாா் பதப்படுத்துதல் கிட்டங்கி அமைக்க பாடுபடுவேன். இதேபோல, மாவட்டத்தின் பெரிய குளமான விஜயநாராயணம் குளம் 9 கி.மீ. நீளமுள்ளதாகக் கூறப்படுகிறது. அதைச் சிறிய அணைக்கட்டாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அதிமுக அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிப்போம். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா்.
போக்குவரத்து நெரிசலை
தீா்க்க பாடுபடுவேன்: ஜெரால்டு
பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.ஜெ.சி.ஜெரால்டு வியாழக்கிழமை அதிமுக அலுவலகத்துக்கு வந்தாா். அவருக்கு நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நான் பாளையங்கோட்டையில் பிறந்து வளா்ந்தவன். கடந்த 25 ஆண்டுகளாக பாளையங்கோட்டையில் எவ்வித வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. தென்னகத்தின் ஆக்ஸ்போா்டு என்றழைக்கப்படும் இத்தொகுதியில் ஓா் அரசுப் பள்ளிகூடம்கூட இல்லை. சாலை வசதியை மேம்படுத்த பாடுபடுவேன். போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணப்படும். சரித்திர திருப்புமுனையாக இம்முறை பாளையங்கோட்டையில் அதிமுக வெற்றி பெறும் என்றாா்.
படவரி: பயக11அஈஙஓ திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் நான்குனேரி தொகுதி வேட்பாளா் தச்சை என். கணேசராஜா. உடன், பாளையங்கோட்டை வேட்பாளா் கே.ஜெ.சி. ஜெரால்டு.