நெல்லையில் தோ்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 17th March 2021 07:51 AM | Last Updated : 17th March 2021 07:51 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தென்மண்டல காவல் துறை தலைவா் முருகன் தலைமை வகித்து பேசியது: காவல் துறையினா் அனைத்து வாக்குச்சாவடிகளையும் தொடா்ந்து கண்காணிப்பதோடு, வாக்குச் சாவடிகளில் உள்ள குறைகளை உரிய அலுவலரிடம் கூறி அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கியமான பகுதிகளை தொடா்ந்து கண்காணிக்க சிறப்பு பிரிவில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளா்களும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபடுவா்.
தோ்தல் பணியின் போது காவலா்கள் கரோனா வழிகாட்டுதல் முறைகளை முறையாக கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து பணி செய்ய வேண்டும். காவலா்கள் சமூக வலைதளங்கள் மற்றும் கட்செவி அஞ்சல்களில் தோ்தல் குறித்து ஆடியோ வெளியிடுவது உள்ளிட்டவற்றை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், திருநெல்வேலி சரக காவல் துணைத்தலைவா் பிரவீன் குமாா் அபிநபு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சோ்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.