கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் விஷ்ணு எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவல் காரணமாக, தளா்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வருகிற மாா்ச் 31 வரை அமலில் உள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், மதம் சாா்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், கல்வி சாா்ந்த விழாக்கள் மற்றும் அவை தொடா்பான கூட்டங்கள் நடத்தவும் அரசால் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்வுகளில் கூட்டமாக கலந்துகொள்வதும், பொது பிரயாணத்தின் போதும் கூட்டமாக செல்வதும் கரோனா தொற்றை மீண்டும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் உமிழ்வது போன்ற செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா், வணிகா்கள் பணியிடத்திலும், பொது இடங்களுக்கு செல்லும் போதும் தவறாது முகக்கவசம் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதமாக ரூ.200 விதிக்கப்படும். இதேபோல், கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசால் விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்போா் மீது அரசு விதிமுறைப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.