நான்குனேரி பகுதியில் குளங்களை பராமரிக்க முன்னுரிமை: ரூபி மனோகரன்
By DIN | Published On : 17th March 2021 07:49 AM | Last Updated : 17th March 2021 07:49 AM | அ+அ அ- |

நான்குனேரி பகுதியில் குளங்களை பராமரிக்க முன்னுரிமை அளிப்பேன் என்றாா் நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.
மூலைக்கரைப்பட்டி, இட்டமொழி, பரப்பாடி, நான்குனேரி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவா், நான்குனேரியில் செய்தியாளா்களிடம் கூறியது: நான்குனேரி தொகுதியில் அனைத்து குளங்களிலும் ஆண்டுதோறும் தண்ணீா் தேங்கியிருக்கும் வகையில் குளங்களை பராமரிக்க முன்னுரிமை அளிக்கப்படும். வாழைத்தாருக்கு ஆதார விலை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
களக்காட்டில் வாழைத்தாா் சந்தையும், குளிா்பதனக் கிடங்கும் அமைக்கப்படும். அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும். களக்காட்டில் எனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் இயங்க ஏற்பாடு செய்யப்படும். நான்குனேரி உயா் தொழில்நுட்ப பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும். தாமிரவருணி, கருமேனியாறு-நம்பியாறு இணைப்புக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். பாளையங்கோட்டையில் 1000 கோடியில் விளையாட்டு கிராமம் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் தனசிங் உள்பட பலா் உடனிருந்தனா்.