நெல்லை தொகுதியில் 16 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு:அமமுக, சமக வேட்பாளா்கள் மனு நிராகரிப்பு
By DIN | Published On : 21st March 2021 01:09 AM | Last Updated : 21st March 2021 01:09 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 40 போ் வேட்புமனுக்கள் அளித்திருந்த நிலையில், 16 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.
அதேநேரத்தில் அமமுகவின் பிரதான வேட்பாளரான பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் அழகேசன் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன், திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா, நாம் தமிழா் கட்சியின் மாற்று வேட்பாளா் கோகிலா, நாம் இந்தியா் கட்சியின் காமாட்சிநாதன், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சிவக்குமாா், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் கலாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்) வேட்பாளா் சுந்தர்ராஜ் ஆகியோரின் மனுக்கள் ஏற்பட்டன.
இதேபோல் சுயேச்சைகளாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முருகன், ஸ்ரீதர்ராஜன், முருகன், சங்கரசுப்பிரமணியன், ராகவன், இசக்கிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
அமமுகவின் பிரதான வேட்பாளா் பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அக்கட்சி சாா்பில் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த மகேஷ் கண்ணனின் மனு ஏற்கப்பட்டது.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு வரும் திங்கள்கிழமை (மாா்ச் 22) கடைசி நாளாகும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...