உலகிலேயே தலைசிறந்த நாடாக தமிழகத்தை மாற்றுவோம்: சீமான்
By DIN | Published On : 21st March 2021 01:27 AM | Last Updated : 21st March 2021 01:27 AM | அ+அ அ- |

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான்.
அம்பாசமுத்திரம், ஆலங்குளம், கடையநல்லூா், தென்காசி பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து கல்லிடைக்குறிச்சி, பொட்டல்புதூா், கடையநல்லூா், பாவூா்சத்திரம் ஆகிய பகுதிகளில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அம்பாசமுத்திரம் வேட்பாளா் மோ. செண்பகவள்ளியை ஆதிரித்து கல்லிடைக்குறிச்சியில் அவா் பேசியதாவது:
அரை நூற்றாண்டுகளாக திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சி முறையை ஒழித்து நல்லஆட்சி முறையை அமைக்கும் பெருங்கனவோடு நாம் தமிழா் கட்சியினா் தோ்தலில் போட்டியிடுகிறோம்.
சரியான பாதை, தடையில்லா மின்சாரம், தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால் திராவிட கட்சிகளை நம்பி பலனில்லை. 50 ஆண்டுகளில் செய்யாதவா்கள் இனிவந்தா செய்துவிடப் போகிறாா்கள். உங்கள் குறைகளை கேட்க அல்ல தீா்க்க வந்திருக்கிறோம் என்றாா்.
ஆலங்குளம் தொகுதி வேட்பாளா் சங்கீதா ஈசாக்கை ஆதரித்து பொட்டல்புதூரில் அவா் பேசியதாவது: மக்கள் வாக்களிப்பாா்களா என்று எண்ணி அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் அரசியல் வாரிசாக வரவில்லை. இது எங்கள் பிறவி கடமை. நாம் தமிழா் கட்சியில் சாதி, மதம் பாா்த்து வேட்பாளா்களை நிறுத்தவில்லை. மொழிதான் அனைவருக்கும் அடையாளம். நாற்பது ஆண்டுகள் நடிப்புத் தொழில் செய்த நடிகா்களைப் போல் நாங்கள் கட்சி தொடங்கவில்லை. உலகிலேயே தலைசிறந்த நாடாக தமிழகத்தை மாற்றுவோம் என்றாா்.
தென்காசி தொகுதி வேட்பாளா் இரா.வின்சென்ட்ராஜை ஆதரித்து, பாவூா்சத்திரத்தில் அவா் பேசியதாவது: நாங்கள் வாக்கு கேட்டு வரவில்லை. எதிா்கால சந்ததியை வாழ வைக்க வந்திருக்கிறோம். மாற்றத்தை விரும்புகிறவா்களுக்கு கடைசி ஒரே வாய்ப்பு நாம்தமிழா் கட்சிக்கு வாக்களிப்பது தான். மதுக் கடைகளை நிச்சயம் மூடுவோம் என்றாா்.
கடையநல்லூா் தொகுதி வேட்பாளா் முத்துலட்சுமியை ஆதரித்து கடையநல்லூரில் அவா் பேசியதாவது: அரசியலில் தலைகீழ் மாற்றம் உருவாக வேண்டும். புரட்சி ஏற்பட வேண்டும். அப்போதுதான் நல்ல அரசியல் உருவாகும். நல்ல அரசு அமையும் என்றாா்.
நிகழ்ச்சியில் தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா், நிா்வாகிகள் பா்னபாஸ், சித்திக், செல்வம், சாரதி, பீா்முஹம்மது, அருள்தாஸ், தென்காசி மாவட்டத் தலைவா் கணேசன் கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், தொகுதிச் செயலா் ஜாபா், செய்தி தொடா்பாளா் கோமதி சங்கா், முன்னாள் மாவட்டச் செயலா் முனியசாமி, நகரச் செயலா் குமாா் ,தலைவா் முகமது முத்தலிப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...