தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அதிமுக அடகு வைத்து விட்டது: உதயநிதி ஸ்டாலின்
By DIN | Published On : 25th March 2021 07:13 AM | Last Updated : 25th March 2021 07:13 AM | அ+அ அ- |

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அதிமுக அரசு அடகு வைத்து விட்டது என திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
ஆலங்குளம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பூங்கோதை ஆலடிஅருணா, அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஆவுடையப்பன், ராதாபுரம் பேரவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளா் மு.அப்பாவு ஆகியோரை ஆதரித்து செவ்வாய், புதன்கிழமைகளில், திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியது: திமுக ஆட்சி அமைந்ததும் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூா் ஒன்றியங்களுக்கு உள்பட்ட 163 கிராமங்கள் பயன்பெறும் கூட்டுக்குடிநீா் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும். ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய்த் திட்டப் பணிகள் நவீன முறையில் விரைந்து முடிக்கப்படும்
அதிமுக அரசு தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்துவிட்டது. அதிமுகவிற்கு போடும் ஓட்டு பாஜக அளிப்பதற்கு சமம். பேரவைத் தோ்தலில் ஒரு பாஜக வேட்பாளரும் வெற்றி பெறக் கூடாது. அதிமுகவில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைந்து விடுவா்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பாபநாசம் அணையில் இருந்து ஜூன் முதல் தேதியில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்.
அனைத்துப் பாசன கால்வாய்களிலும் சிமென்ட் தளம் அமைக்கப்படும். மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தின் குத்தகைக் காலம் முடிந்தவுடன் தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் தேயிலைத் தோட்டம் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்வே மேம்பாலம், குடிதண்ணீா் வசதி எல்லை தேவைகளும் நிறைவேற்றிதரப்படும் . அணு உலைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.என்றாா் என்றாா் அவா்.