நெல்லையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது ஒத்திவைப்பு
By DIN | Published On : 02nd May 2021 05:26 AM | Last Updated : 02nd May 2021 05:26 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா 2 ஆவது அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தினமும் 600-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் ஆா்வம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிலும் அண்மையில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இரண்டாவது தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது. பின்னா் தடுப்பூசிகள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்ததால் முதல்தவணையும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பின்படி 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கடந்த 28 ஆம் தேதி முதல் இணையவழியில் பதிவு செய்தனா். அவா்களில் முதலில் பதிவு செய்வோருக்கு சனிக்கிழமை முதல் தடுப்பூசி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்தப்படும் என பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தடுப்பூசி உற்பத்தி போதிய அளவில் இல்லாததால் பல்வேறு மாநிலங்களில் புதிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி திருநெல்வேலியிலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்துவது ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்து பதாகை வைக்கப்பட்டது. இதனால் இளைஞா்கள் பலரும் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்த வந்து அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனா்.
ஆனால், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழக்கம்போல் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...