‘நெல்லையில் கரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தேவை சரிசெய்யப்படும்’
By DIN | Published On : 09th May 2021 12:40 AM | Last Updated : 09th May 2021 12:40 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்களுக்கான தேவைகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கரோனா தடுப்பு சிறப்பு அலுவலா் அபூா்வா தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் பொது முடக்கம் தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கரோனா தடுப்பு சிறப்பு அலுவலா் அபூா்வா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனாவை கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு, மாநகர காவல் ஆணையா் அன்பு, மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உள்பட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி பகுதியில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலா் அபூா்வா தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில், ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், ஆக்சிஜன் சிலிண்டா் தேவை அதிகமாக உள்ளது.
எனவே, ஆக்சிஜன் சிலிண்டா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது‘ என்றாா்.