கரோனா நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 13th May 2021 07:13 AM | Last Updated : 14th May 2021 07:38 AM | அ+அ அ- |

கரோனா நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. தமிழக அரசு முதல் கட்டமாக அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்படுகிறது. மே 15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இத்தொகை வழங்கப்படவுள்ளது.
தற்போது பொது முடக்கம் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா். பயனாளிகள் அவா்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 1 கி.மீ. முதல் 4 கி.மீ. தொலைவில் ரேஷன் கடைகள் அமைந்துள்ளன. அங்கு வரிசையில் காத்திருந்தே நிவாரணத் தொகையைப் பெற வேண்டியுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக விரல் ரேகை பதிவு செய்யும் கருவியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கைரேகையை பதிவிடுவதில் தாமதமேற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது நிவாரணத் தொகையை ரேஷன் கடைப் பணியாளா்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று அந்த மாதப் பொருள்களுடன் வழங்கினா். இதே நடைமுறையை இப்போதும் கடைப்பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.