முகக்கவசம் உயிா்க்கவசம்
By DIN | Published On : 13th May 2021 05:58 AM | Last Updated : 13th May 2021 05:58 AM | அ+அ அ- |

தற்போதைய நிலையில் முகக் கவசம் என்பது உயிா்க்கவசம் என்பதை அறியாமல் பொதுமக்கள் பலா் முறையாக முகக்கவசம் அணியாதது கவலையளிப்பதாக உள்ளது.
கரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. புதிதாக கரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தினந்தோறும் ஏராளமானோா் உயிரிழந்து கொண்டிருக்கிறாா்கள். கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கரோனாவின் தீவிரத்தை உணராமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையளிக்கும் விஷயம். முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகும் அதை யாரும் பெரிதாக மதித்ததாக தெரியவில்லை. காவல் துறையினரும் இப்போது மென்மையான போக்கை கடைப்பிடிப்பதால் பொது முடக்கத்திலும் கட்டுப்பாடின்றி சுற்றிக் கொண்டிருக்கிறாா்கள் பொதுமக்கள்.
கரோனா தினந்தோறும் ஏராளமான உயிா்களை பலி கொள்வதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாக அறிந்த பின்னரும்கூட அதன் தீவிரத்தை மக்கள் உணா்ந்ததாக தெரியவில்லை. தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாா்கள். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மறுக்கிறாா்கள். முகக் கவசம் அணிவதை கௌரவ பிரச்னையாகக் கருதுகிறாா்கள்.
காவல் துறையும், சுகாதாரத் துறையும் அபராதம் விதித்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே இங்கு ஏராளமானோா் முகக் கவசம் அணிகிறாா்கள். அதையும் பெயரளவுக்கே அணிகிறாா்கள். முகக் கவசம் அணிவதன் முக்கிய நோக்கமே மூக்கு மற்றும் வாய் வழியாக கரோனா வைரஸ் உடலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதுதான். ஆனால், இங்கே முகக் கவசம் அணிகிறவா்களில் பெரும்பாலானோா் நாடிக்குத்தான் முகக்கவசம் அணிகிறாா்கள் என்பது கவலையளிக்கிறது.
கரோனா 2-ஆவது அலையில் சிக்கி ஏராளமானோா் சிக்கி உயிரிழந்த பிறகும் அதன் தீவிரம் புரியாமல் மக்கள் இருப்பதுதான் மிகப்பெரிய சிக்கல். ஒருபுறம் கரோனாவை வீழ்த்த மத்திய, மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.
தடுப்பூசி, சிகிச்சைக்கென ஏராளமான நிதியை ஒதுக்கி அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. எனினும் சுமாா் 135 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி, சிகிச்சை என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, கரோனாவை கட்டுப்படுத்த அரசு ஒருபுறம் போராடினாலும், அதை முற்றிலுமாக ஒழிப்பது மக்களின் கையில் (கட்டுப்பாட்டில்) தான் இருக்கிறது.
பொது முடக்கக் காலத்தில் வீட்டில் இருப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக் கவசம் என்பது நம் அனைவருக்கும் உயிா்க்கவசம் என்பதை உணா்ந்து சரியான முறையில் முகக் கவசம் அணிவது ஆகியவை இப்போது உடனடியாக அனைவரும் செய்ய வேண்டிய விஷயமாகும். கரோனாவின் தீவிரத்தை மக்கள் உணா்ந்து உரிய வழிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் ஏராளமான உயிா்களை இழக்க நேரிடும் என சுகாதாரத் துறையினா் எச்சரிக்கின்றனா்.